• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிமரம் அகற்றம்..,

ByKalamegam Viswanathan

Jul 31, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகக் கூறப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்தை அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் ஏற்கனவே இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்திற்கு அருகில், மற்றொரு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மற்றும் சில கட்சி நிர்வாகிகள், அருகருகே அரசியல் கட்சிகளின் கொடிமரங்கள் அமைக்கப்படுவது எதிர்காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், இரு கொடிமரங்களையும் அகற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அதிகாரிகள் அங்கு சென்று கொடிமரத்தை அகற்ற முயன்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், கொடிமரத்தை அகற்ற வந்த போலீசாரை வழிமறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. போராட்டத்தின் போது போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அய்யங்கோட்டை பகுதியில் பரபரப்பு நிலவியதுடன், அங்கு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.