தமிழகமெங்கும் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் படம் தியேட்டர்களில் இன்று காலை முதல் திரையிடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திரையரங்கில் இன்று காலை 9 மணிக்கு ரசிகர்கள் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கும் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கும் வருகை தந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கட்சி நிர்வாகிகளுடன் திரையரங்கிற்கு வந்தார். அப்போது தியேட்டர் முன்பு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா முன்பு ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட முயன்றனர். சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் சமாதானம் ஆகாத நிர்வாகிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கட்சி நிர்வாகிகள் என்ற பெயரில் சிலர் கட்சிக்கு விசுவாசமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சட்டமன்ற உறுப்பினரிடம் நெருங்க விடாமல் எம்எல்ஏ வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தொண்டர்கள் தங்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள சலசலப்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கட்சி தலைமை உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் விசாரணை செய்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.




