விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புல்லகவுண்டன்பட்டி, கொம்மங்கியாபுரம், முத்தாண்டியாபுரம், புதுப்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் கேந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பயிரிடப்பட்ட 40 நாளில் இருந்து 45 வது நாட்கள் வரை பூக்களை பறிக்க முடியும்.

மேலும் தொடர்ந்து மூன்றரை மாதங்கள் வரை பூக்களை பறிக்கலாம். கேந்தி பூக்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது. கேந்திபூக்களுக்கு எப்போதும் தேவை இருப்பதால் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது.மேலும் திருவிழாக்கள் சமயங்களிலும், முகூர்த்த நாட்களிலும், அதிக லாபத்தை கொடுத்து வருகின்றன. கிணற்று பாசனத்தில் குறைந்த அளவு பராமரிப்பில் அதிக லாபத்தை கொடுத்து வருகின்றன. சென்ற மாதம் மாசி மாத குலதெய்வ வழிபாடு மற்றும் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்ததால் கேந்தி பூக்கள் கிலோ ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. பூக்களுக்கும் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்தது. இந்த நிலையில் கேந்தி பூக்கள் விலை ரூபாய் 10 ரூபாயாக குறைந்துவிட்டது. பறித்தால் நஷ்டம் ஏற்பட கூடும் என்பதால் செடிகளில் பறிக்காமல் கருகிப் போய்விட்டது.

இதுகுறித்து புல்ல கவுண்டன்பட்டி விவசாயி முத்துராஜ் கூறியது
குறைந்த பராமரிப்பில் கேந்திப்பூக்கள் பயிரிடபட்டு போதுமான லாபத்தை கொடுத்து வருகின்றன. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் கேந்தி பூக்கள் அறுவடை சமயத்தில் வியாபாரிகளை நேரில் வந்து வாங்கி செல்வதால் விற்பனை செய்வதற்கு எளிதாக இருந்து வருகிறது. தொடர்ந்து இலாபத்தை கொடுத்த கேந்தி பூக்கள் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கிலோ ரூபாய் 10 ஆக குறைந்ததால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம். இதனால் பூக்களைப் பறிக்காமல் கருகி போய்விட்டதால் பூக்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என கூறினார்.








