கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை, ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் அடுத்த செட்டிபாளையம் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், பிற்பகல் குடோனில் திடீரெனத் தீப்பிடித்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால், தீ மிக வேகமாகப் பரவி, குடோன் முழுவதும் எரியத் தொடங்கியது.
பிளாஸ்டிக் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட கரும்புகை, அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானமே இருண்டது போல் காட்சி அளித்தது. புகை மூட்டத்தால் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் செட்டிபாளையம் போலீசார் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டும், தீயின் வேகம் குறையாததால் வீரர்கள் நீண்ட நேரம் போராட வேண்டி இருந்தது.
சுமார் 4 மணி நேரக் கடும் போராட்டத்திற்குப் பிறகு, தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
இந்தத் தீ விபத்து குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.






