டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சி “லெட்ஸ் டாக் இன் கோவை” (பேசலாம் கோவையில்…) ஒன்றை நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி இன்று (22.1.26) மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது முழுமையான, சமூகப் பொறுப்புணர்வுமிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்வில் எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; ஜி.கே.டி. சேரிட்டி டிரஸ்டின் அறங்காவலர் லலிதா தேவி சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி டீன் வைத்தியநாதன் ராமசுவாமி; கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மைக்கல், யங் இந்தியன்ஸ் கோவை கிளையின் தலைவர் நீல் கிக்கானி; சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவு இன்று நடைபெற்றது. இதில் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் சுரேஷ் ஏரியாட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன் பின்னர் டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. இத்துடன் சுரேஷ் அவர்களின் சிறந்த திரைப்படைப்புகள் சில காட்சிப்படுத்தப்பட்டது.
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ.-யின் அங்கமான யங் இந்தியன்ஸ் – கோவை கிளை அமைப்புடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எல்.எம்.டபிள்யு. லிமிடெட் ஆதரவளித்தது.

நிகழ்வின் போது, எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு மற்றும் சுரேஷ் ஏரியாட் இணைந்து சி.ஐ.ஐ. புதிய லோகோ-வை அறிமுகம் செய்து வைத்தனர்.அவரை தொடர்ந்து ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ எனும் தலைப்பில் சுரேஷ் ஏரியாட் பேசினார்.






