வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் 12,934 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. அதனை விஜய கரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமையில் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் ராஜலட்சுமி, சாந்தி, மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், கண்காட்சி அரங்கினை பார்வையிட்டனர்.

அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் அகழாய்வில் கிடைத்த பொருட்களை பற்றி அதன் தொன்மை பற்றியும், பாதுகாப்பு பற்றியும், விளக்கி கூறினார். பள்ளி மாணவ ,மாணவிகள் கண்காட்சியை முழுமையாக ஆர்வமுடன் பார்வையிட்டு குறிப்பு எடுத்துக் கொண்டனர். மேலும் பொங்கல் தொடர் விடுமுறையில் மட்டும் 1300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கண்காட்சியினை பார்வையிட்டதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.





