கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினரும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக அங்கு இருந்து உணவு தேடி கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் படையெடுக்க துவங்கியது. அப்பொழுது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களையும், கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் வைத்து இருக்கும் உணவுப் பொருட்களை தின்று சூறையாடி செல்வது வாடிக்கையாகி கொண்டது. உணவுப் பொருட்களை ருசி கண்ட யானைகள் உணவுகளை தேடி அடிக்கடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க முயலும் விவசாயிகளை மற்றும் பொதுமக்களை தாக்கி உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் என்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த யானை ஓடையில் நீர் அருந்த செல்லும் போது கீழே விழுந்து உயிரிழந்தது.

ரோலக்ஸ் ஒற்றைக் காட்டு இருக்கும் வரை சிறுவாணி அடிவரப் பகுதிகளில் ஒற்றை கொம்பன் என்ற காட்டு யானையும், தடாகம், வரப்பாளையம் பன்னிமடை சுற்று வட்டார பகுதிகளில் வேட்டையன் என்ற ஒற்றைக் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன.
தற்பொழுது ரோலக்ஸ் என்ற ஒற்றை காட்டு யானை இல்லை என்பதால், அடிக்கடி அந்த ஒற்றை கொம்பன் மற்றும் வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானைகள் ஊருக்குப் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் தோட்டத்தில் குமார் மேஸ்திரி அவரது மனைவி மற்றும் கனகராஜ், அவரது மனைவி என இரண்டு விவசாயக் கூலி வேலை செய்து வரும் குடும்பத்தினர் தங்கி வேலை செய்து வருகின்றன.
நேற்று இரவு அங்கு வந்த வேட்டையன் என்ற அந்த ஒற்றை காட்டு யானையை கண்ட தொழிலாளி குடும்பத்தினர் அச்சம் அடைந்து அங்கு இருக்கும் மற்றொரு அறைக்கு சென்று உயிர்த்தப்பினர். வீட்டிற்குள் இருந்த உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது, இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு இருந்த ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அந்த ஒற்றை காட்டு யானை வேட்டையன் விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதை தடுக்க தமிழக அரசு மற்றும் வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது..




