அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் வாழ்ந்த இல்லத்திற்கே சென்று விருது வழங்கி வரலாறு மீட்புக் குழு கௌரவித்துள்ளது.

தென்கச்சி கோ சுவாமிநாதன் குடும்பத்தினரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
டிசம்பர் 24 புதன் கிழமை அரியலூர் மாவட்ட ஆளுமைகளில் மிக மிக பிரபலமானவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அகில இந்திய வானொலியில் இன்று ஒரு தகவல் மூலமாக சாமானிய மக்களிடையே வெகுவாக அறிமுகமானவர். தனது எளிய பேச்சுநடையால் மிக மிக நுட்பமாக நகைச்சுவை உணர்வு கலந்து பேசும் திறமை வாய்ந்தவர். 1946 ல் பிறந்தவர் தனது 63 வது அகவையில் 2009 ஆம் ஆண்டு மறைந்தவர். இவர் ஒரு வேளாண் பட்டதாரி.
இவரது குட்டிக்கதைகள் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனது கருத்துக்களால் பல வரலாற்று செய்திகளை கூறியவர். இவர் மறைந்தாலும் இன்றளவும் அவரது கருத்துக்களை தொலைக்காட்சி ஊடகங்கள் காணொளிகள் வழியாக அழகிய தமிழில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதனை விருது வழங்கும் நிகழ்வில் நினைவுகூர்ந்தனர். மேலும் இவர் அரியலூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தான் அரியலூரில் உள்ள வரலாற்று ஆவணமாக திகழும் தென்கச்சி கோ.சுவாமிநாதனின் புகழையும் அறிவையும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இவருக்கு வரலாறு மீட்புக் குழு விருது வழங்கி கௌரவிக்கின்றது. என்றும் தென்கச்சி கோ சுவாமிநாதன் வாழ்ந்த இல்லத்தை பாரதியார் அப்துல்கலாம் இல்லம் போல அரசு வரலாற்று நினைவு இல்லமாக அறிவிக்க இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் எனவும் வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தான் கற்ற கல்வி பிறருக்கு பயன்படும் வகையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உன்னதமான மாமனிதர் என விருது வழங்கும் விழாவில் அவருக்கு புகழாரம் சூட்டினர். இவரது சேவையைப் பாராட்டி அவரது குடும்பத்தினருக்கு வரலாறு மீட்புக் குழு சார்பில் விருது வழங்கிட தீர்மானிக்கப்பட்டது. தேசிய உழவர் தினத்தை முன்னிட்டு வரலாறு மீட்புக் குழு சார்பில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு மாமனிதர் 2025 விருதினை அவரது குடும்பத்தினருக்கு வழங்கி கௌவுரவப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம், நம்மாழ்வார் மரபு வழி வேளாண் நடுவம் நிறுவனர் ம.இராவணன் தென்கச்சி கோ. சுவாமிநாதன் பெயரன் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




