சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, வியோம் (VYOM) எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை டிசம்பர் 28ம் தேதி அன்று சரவணம்பட்டி, குமரகுரு வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் நடத்த உள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில் சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்-ன் இணை செயலர்கள் திரு. பிரகாஷ் மற்றும் காயத்திரி பிரகாஷ் பங்கேற்று பேசினர். அவர்கள் கூறியதாவது :

இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் மற்றும் வீணை, வயலின்,கிட்டார். புல்லாங்குழல், கீபோர்ட் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் தாள வாத்தியங்கள் இடம்பெறுகின்றன. மொத்தம் 60 கலைஞர்கள் கொண்ட இந்தக் குழுவில், சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
“வியோம்” என்ற சொல்லுக்கு “வெளி / ஆகாயம்” என்று பொருள். இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய இசையின் மூலம் பல்வேறு உணர்வுகள், மனநிலைகள் மற்றும் பரிமாணங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தும்.

இது சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் நான்காவது பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சி ஆகும். மொத்தம் 2 மணி நேரம் இந்த கச்சேரி நடைபெறும். இதற்கான டிக்கெட் வடவள்ளியில் உள்ள சிவாஞ்சலி அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் ரேஸ் கோர்ஸ் மற்றும் அரசு கலை கல்லூரி வழியே உள்ள அன்னலட்சுமி உணவகத்திலும், https://www.tfacbe.com/event-details/vyom. எனும் இணையத்தளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
டிக்கெட்டுகளுக்கு இதுதான் விலை என கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் கட்டணத்தை, இதற்கு தங்கள் மனதில் கொடுக்கத் தூண்டப்படும் ஒரு தொகை எதுவாக இருந்தாலும் அதை கொடுத்து டிக்கெட்டை பெறலாம்.
இவ்வாறு தெரிவித்தனர்.




