திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என தனிநீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததாக, அரசு அதிகாரிகள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற அறைக்கு நேரில் வருகை தந்தனர். தெற்கு காவல் துணை ஆணையர், திருப்பரங்குன்றம் உதவி காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆஜராகினர். வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், மத்திய உள்துறை செயலாளர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின் போது,
என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏன் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தலைமைச் செயலாளர், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் அது பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்ற எந்த கருத்தும் இல்லை என விளக்கம் அளித்தார். மேலும், சட்ட ஒழுங்கு மற்றும் மதநல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி,
நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால், அதை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது என்ன விதமான செயல்? நீதிமன்ற உத்தரவுகளை இப்படிப் புறக்கணிக்க முடியாது என கடுமையாக சாடினார்.
மேலும், முந்தைய விசாரணைகளில் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் விகாசிங், தனிநீதிபதி தேர்தலில் கூட போட்டியிடலாம் என்ற வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாகவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா? இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் ஏன் இப்படிப் பேசினீர்கள்? என அவர் கேட்டதுடன், அந்த கருத்து நீதிமன்ற மரியாதையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விசாரணையின் இறுதியில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கி, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.




