நேர்மையற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதி என்றுமே தமிழனை உயர்த்தாது, அது தாழ்த்தும் என்று திமுக முதலமைச்சர் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
பழனியில் பாஜக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது : –


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதின் கபின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் கபின் அவர்களது சிறப்பான தலைமையின் கீழ் வருகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும், 2026 தமிழக தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றம் என்பது தேசிய அளவில் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்றும், தொகுதி பங்கீடுகள் முடிந்த பின்னரே எந்தெந்த தொகுதி என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
திமுக தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி ஒரு தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். பல மாதங்களுக்கு பிறகு இரண்டு ஏக்கர் நிலம் தருவது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2ஏக்கர் நிலம் கொடுக்கும் அளவுக்கு நிலமில்லை என்று தனக்கு தற்போது தான் தெரியவந்துள்ளதாக கூறினார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி மனதறிந்து பொய் சொல்லி வெற்றிபெற்றார். அதுபோலத்தான் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் எச் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு இடம் கொடுப்பதும், ஆட்சி முடியும் தருவாயில் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதும் என்றும், அவர்களது வாக்குகளை பெறுவதற்காக திமுக வலை விரிக்கிறது என்றும் இது ஒரு தந்திரம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திமுக தேர்தல் நெருங்கி வரும் மேல வேலையில் பொங்கல் விழாவின்போது ஆளுக்கொரு வீடு கொடுப்போம், பெண்களுக்கு இருப்பது போல ஆண்களுக்கும் இலவச பேருந்து விடியல் பயணம் என்றும், இன்னும் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டால் ஆளுக்கொரு பேருந்தே தருவதாக சொல்லி, அந்த பேருந்தை ஓட்டி சேவைசெய்ய எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று திமுக கேட்டாலும் ஆச்சரியமில்லை என்றும் தெரிவித்தார். மேலும் நேர்மையற்றவர்களுடைய வாக்குறுதிகள் என்றுமே தமிழனை உயர்த்தாது அது தாழ்த்தும் என்றும் தெரிவித்தார். எத்தனை சங்கிப்படைகளை கூட்டிக்கொண்டு வந்தாலும் அமைச்சர் ஆவால் எதுவும் செய்ய முடியாது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, பாஜகவின் கொடியை ஏற்ற ஒரு அங்குலம் இடம் கூட தமிழகத்தில் கிடைக்காது என்று மு க ஸ்டாலின் அவர்களது தந்தை கருணாநிதி ஒருகாலத்தில் சொன்னார். ஆனால் தற்போது தமிழகமெங்கும் பாஜக கொடி பறக்கிறது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் பதில் சொல்லும் என்றார்.
தொடர்ந்து தமிழகத்தை நாசப் படுத்திக் கொண்டிருக்கிற திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். எனவே திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று யாரெல்லாம் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது என்றும், இன்னும் ஒரு சில மாதங்களில் கூட்டணி முழு உருவம் பெறும் என்றும் தெரிவித்தார். கேரளாவின் இதயமாக கருதப்படும் திருவனந்தபுரத்தை பாரதிய ஜனதா கட்சி தன் வசப்படுத்தி இருக்கிறது என்றும், இது வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மேலும் வெற்றிக்கான வலுவை சேர்க்கும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தனபால், முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




