கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை, செட்டிபாளையம் பகுதியில் மெத்தம்பேட்டமை என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோத்ரேஜ் நிறுவனம் பின்புறம் நேரு நகர், வறட்டு குப்பை மற்றும் ஈச்சனாரி பிரிவு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த மூன்று வாலிபர்களைப் பிடித்து நடத்திய சோதனையில் அவர்களிடம் உயர் ரக போதை பொருளான மெத்தம்பேட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா என்ற சபீர், ஷஃபிகான், மற்றும் பாலகிருஷ்ணன் என்ற பப்லு என்பதும் அவர்கள் மெத்தம்பேட்டமைன் என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது,
அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 9.7 கிராம் மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.








