சென்னை பள்ளிக்கரணை 189-வது வார்டு மல்லிகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சுமார் நான்கு ஏக்கர் காலி நிலத்தைச் சுற்றி, இரண்டு தரப்பினரிடையே உரிமை தொடர்பான கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர், “இந்த நிலம் எங்களுடையது; கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வைத்திருப்பதும், தற்போது இதை பறிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்” என தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், “இந்த இடம் அரசால் இறுதி சடங்கு செய்யும் தேவைக்காக வழங்கப்பட்டுள்ளது” என வலியுறுத்தியதால் நிலைமை பதற்றமாகியது.
தகவலறிந்து உடனடியாக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருதரப்பினரையும் சமரச பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தினர்.

பின்னர், “இப்போதைக்கு இந்த நிலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது” என போலீசார் தெரிவித்ததுடன், இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டுமெனவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாக்கக் கூடாது எனவும் எச்சரித்து, பின்னர் இருதரப்பினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளிக்கரணையில் நில உரிமை சர்ச்சை காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால், அப்பகுதியில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.








