பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படக்கூடிய ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் கோவை மாவட்டம் வழியாக கேரளாவிற்குள் சென்று வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதி கேரள மாநிலத்திற்கான முக்கிய நுழைவாயிலாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் தமிழக பதிவெண் மற்றும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த கேரள மாநில வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒவ்வொரு பேருந்திற்கும் தலா 2.5 லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை மாநில சாலை வரிக்கான அபராதம் விதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு எட்டு மணி முதல் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.எட்டு மணிக்கு முன்பாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை,பெங்களூர் ஐதராபாத் என பல்வேறு நகரங்களில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்ட 15 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கோவை அடுத்த வாளையார் பகுதியில் நிறுத்தப்பட்டன.
ஏற்கனவே மத்திய அரசின் சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் பெற்று நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழக உரிமையாளர்களுக்கு சொந்தமான ஆம்னி வாகனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து கேரளா வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் அபராத தொகை விதிப்பதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
கேரளாவில் தங்கள் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதால் தற்போது கேரளா எல்லைக்குள் பேருந்துகளை இயக்கவில்லை என்றும் போராட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே தாங்கள் பயணிகளை ஏற்றியதால் தற்பொழுது தமிழக எல்லை வரை பேருந்து இயக்குவதாக கூறிய அவர்கள், தேசிய அளவில் சுற்றுலா பேருந்துகளுக்கான உரிம கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வரும் நிலையில் மாநில உரிமத்திற்கான கட்டணம் செலுத்தும் வகையறா ஆன்லைன் படிவத்தில் இல்லை என்றும் ஆனால் மாநில வரி செலுத்த வேண்டும் என கேரளா வட்டார போக்குவரத்து துறை கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேருந்துகளை அதே பகுதியில் நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆறு மணிக்கு எர்ணாகுளம் அடுத்த வயிட்டிலா பகுதியை சென்றடையும் என தங்களை பேருந்தில் ஏற்றிவிட்டு தற்பொழுது 7 மணியை கடந்தும் கேரளா எல்லையை கூட கடக்கவில்லை என ஆத்திரத்துடன் கூறிய பயணிகள், பல்வேறு பணிகளுக்கு இடையில் இதுபோன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து நடுவழியில் நிறுத்தி இருப்பது வேதனைக்குரியது என்றும் ஆவேசம் அடைந்தனர்.தொடர்ந்து பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள மாநிலத்திற்குள் போக்குவரத்து துறையினர் பேருந்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தாங்கள் பேருந்து உரிமையாளர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என உறுதியளித்ததையடுத்து பயணிகளின் நலன் கருதி பேருந்துகளை இயக்குவதாக கூறி ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் கேரளாவிற்கு இயக்கப்பட்டதால் அங்கு பதட்டம் தனிந்தது.
ஆனால் பல பயணிகள் ஆம்னி பேருந்து திடீர் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் நின்று கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளை இடைமறித்து அதில் ஏறி தங்கள் பயணத்தை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.











; ?>)
; ?>)
; ?>)