தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் சிவன் கோவில் நிலத்தை அனுபவ விவசாயிகளுக்கு விவசாயம் செய்திட முன்னுரிமை அடிப்படையில் குத்தகைக்கு வழங்க வேண்டும். கழனிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை எளிய, விவசாயத் தொழிலாளர்களுக்கு குடிமனை, குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை வழங்க வேண்டும்.

சின்ன கழனிவாசல் கிராமத்திற்கு பொதுமயானம் அமைத்து தர வேண்டும். பள்ளிக்கூட வளாகத்தைச் சுற்றிலும், காம்பௌண்ட் அமைத்து தரவேண்டும். ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தர வேண்டும். கழனிவாசல் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம், நூலகம் அமைத்து தரவேண்டும். சின்ன கழனிவாசல், விஜயன்புஞ்சை பகுதியை இணைத்து பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும்.
அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டி முடிக்கப்படாத வீடுகளை உடனடியாக கட்டி வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கீற்றுக்கூரை வீட்டில் இருக்கும் பயனாளிகளுக்கு உடனே வீடு வழங்க வேண்டும். பழுதடைந்த கேணிப் பாலத்தை சீரமைத்து விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குண்டுங்குழியுமாக இருக்கும், குடியிருப்புச்சாலைகள் அனைத்தையும், தார்ச்சாலையாக புதியதாக அமைத்து தரவேண்டும். நூறுநாள் வேலையை முறைப்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புக்கொண்டவாறு கூலியை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கழனிவாசல் ஊராட்சி கிளை சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டத்துக்கு சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வழக்குரைஞர் வீ.கருப்பையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் வை.நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.நவனேசன், ஆர்.மகாலிங்கம், ஏ.மேனகா, விவசாயிகள் சங்கம் ருக்கூன், மற்றும் கிளைத் தோழர்கள் வ.சிவனேசன், சி.ரமேஷ் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதையடுத்து அங்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், காவல்துறை உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், கோயில் செயல் அலுவலர் அருண் பிரகாஷ் உள்ளிட்டோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளித்தனர்.
இதையேற்று, காலை 10 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மதியம் 2 மணிக்கு முடிவுக்கு வந்தது.













; ?>)
; ?>)
; ?>)