மதுரை மாநகர் திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு புதுத்தெரு நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.. இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

அங்கு பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் மழை நீரோடு சாக்கடை நீரானது வெளியேறி அப்பகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் , பள்ளி மைதானத்திற்குள் சொல்வது தொடர்கதை ஆகி வருகிறது.

40 வருடங்களாக இயங்கி வரும் இப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் பெய்த கனமழையால் சாக்கடை நீர் மழைநீர் செல்ல வழி இல்லாமல் நீரானது பள்ளிக்குள் புகுந்ததாகவும் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்தப் பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் தான் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது பள்ளி வளாகத்திற்குள் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளி வளாகம் முழுவதும் சாக்கடை நீர் சூழ்ந்ததால் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்களை ஆசிரியர்கள் ஒரே அறைகளில் அமர்த்தி பாடம் கற்பித்து வருகின்றனர்.
.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திடீரென வந்த திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பள்ளி வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பள்ளியில் சூழ்ந்துள்ள கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர் மழையினாலும் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தடுப்பினாலும் மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் கால்வாய் சாக்கடை நீர் புகுந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் ஒரே அறையில் அமர வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.