கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. கடையின் இரண்டாவது மாடியில் தீப்பற்றி எரியும் நிலையில் கிரேன் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, ஒப்பணக்கார வீதியில் பாபு என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த துணிக் கடையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கடையின் இரண்டாவது மாடியில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அப்பகுதியில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக கடை உரிமையாளருக்கும் தீ யணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இரண்டாவது மாடியில் தீ பற்றி இருக்கும் நிலையில் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டது.

அதிகாலை நேரத்தில் நடந்த தீ விபத்து காரணமாக ஒப்பணக்கார வீதியில் பரபரப்பான சூழல் நிலவியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக புகை வந்து கொண்டு இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்கான பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது..