கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உள்பட்ட கோவை குற்றாலம் அருவியில் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத் துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ”கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.