தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் வெடித்து மகிழ்வது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு வகையிலான பட்டாசுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

தரையில் வெடித்தும் வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் பொதுமக்கள் மகிழ்ந்த சூழலில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. கோவை மாநகரில் நேற்று இரவு அனைத்து பகுதிகளிலும் பரவலாக வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் காரணமாக ஒட்டுமொத்த மாநகரமும் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது.இதன் காரணமாக இரவில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும் பட்டாசு புகை காரணமாக காற்றும் கடுமையாக மாசு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
