காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு கே.பி.எம் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கால்நடை துறை கிளை மருத்துவமனையை சீரமைத்து புதிதாக கட்டித் தர வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் கோரிக்கையை அடுத்து புதுத்துறை கே.பி.எம் நகரில் உள்ள கால்நடை துறை கட்டிடத்தை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். கட்டிடங்களின் உறுதித் தன்மை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் அவர்கள், விரைவில் சேதமடைந்த கட்டிடங்களின் சீரமைப்பு பணிகளை தொடர்வது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இப்பகுதிக்கு நிரந்தரமாக மேம்படுத்தப்பட்ட கால்நடைத்துறை மருத்துவமனை வேண்டும் எனவும், புதுத்துறை கிராமத்திலிருந்து நகரப் பகுதியுடன் இணைக்கும் சாலைகளை மேம்படுத்த வேண்டும்,பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்கு வசதி, நூலக வசதி, மாலை நேர வகுப்புகளை எடுப்பதற்கு ஆசிரியர்,சாலை வசதி,டெம்போ வசதி மற்றும் புதிய டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த ஆட்சியர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாலை நேர வகுப்பறை எடுப்பதற்கு சிறப்பு ஆசிரியர்கள் கல்வித்துறை மூலம் உடனடியாக ஏற்படுத்தி தரப்படும் என பொதுமக்களிடம் ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.