தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பெரைரா தெரு, சின்ன கடை தெரு மத்திய பாகம் காவல் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

சந்தை ரோட்டில் உள்ள எஸ்பிஜி கோவில் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இந்த தெருவில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால். அங்கே தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த தெரு முழுவதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபால தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது.
தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மேம்படுத்துவதில் அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தினசரி பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கையில் எடுத்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததை ஒரு நாள் மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். மேலும். தற்போது மழை பெய்யக்கூடும். எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.