நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கீழையூர் கீழத் தெருவை சேர்ந்த தீபராஜ் என்ற 13 வயதான சிறுவன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென இடி மின்னல் தாக்கி மயங்கி விழுந்தார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மின்னல் தாக்கிய தாக்கம் காரணமாக இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் திருப்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கீழையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.