தூத்துக்குடி முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் சுவிசேஷ முத்து (42). இவர் தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்போது டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவரது மனைவியின் தங்கையின் கணவர் மாசானமுத்து உட்பட 5பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த சுவிசேஷ முத்து, தன்னை தாக்கியவர்களை இது வரை ஏன் கைது செய்யவில்லை என்று கூறி சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும், அவர் காவல் நிலையம் முன்பு, கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்து இறந்த சுவிசேஷ முத்துவுக்கு முத்துகனி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.” முத்தையா புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில். மத்திய மாநில உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.