வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று 11ம் தேதி மற்றும் நாளை 12ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வு வகுப்புகளில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெற தீனைப்புத் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக “வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்” எனும் ஒரு முயற்சியை தீயணைப்புத்துறை துவங்கி உள்ளது. பொதுமக்களை அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீப்பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிலையங்களில் வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவார்கள்.
ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை, மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. திட்டம் முற்றிலும் இலவசமானது. விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற தீயணைப்புத் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.