இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மகளிருக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், இந்தியாவிலேயே முதல் முறையாக, அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கை, தற்போது அரசின் அமைச்சரவை ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
இந்த முயற்சி மகளிர் நலனை முன்னிலைபடுத்தும் ஒரு முன்னேற்றமான பக்கமாகக் கருதப்பட்டாலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது ஒரு நிதிச்சுமை ஏற்படுத்தக்கூடும் என தொழில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. “பெண்கள் அதிகம் உள்ள நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படும், மேலும் பணியாளர்கள் தேர்விலும் எதிர்மறை தாக்கம் ஏற்படலாம்” என தொழில்துறை சங்கத் தலைவர் உமா ரெட்டி கூறியுள்ளார்.
மாதவிடாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்ட அனுபவம்தான். சிலர் மிகுந்த வலியுடன் வேலையை செய்ய இயலாமல் போவதுடன், சிலர் எந்த சிரமமும் இல்லாமல் வேலை செய்யக்கூடிய நிலையில் இருப்பார்கள். இதை மனதில் கொண்டு, விடுப்பு எப்போது, எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு
