நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி அமிர்தா நகர் மீனவ குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கலையரசி முத்துக்குமார் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கலையரசி சுவாசக் கோளாறு பிரச்சனையால் கடந்த 10 ஆண்டுகளாக அவதியுற்று வருகிறார். கடந்த ஒரு வருடமாக ஆக்சிஜன் பயன்படுத்தி மூச்சு விடும் நிலைமைக்கு தள்ளப்பட்ட கலையரசி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று தற்போது ஆக்சிஜன் உதவியோடு வீட்டிலேயே சிகிச்சையில் இருந்து வருகிறார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த கலையரசி வீட்டிலேயே மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு ஆக்சிஜன் கருவியை பயன்படுத்தி மூச்சுவிட்டு வாழ்ந்து வருகிறார். இதனை அறிந்த அப்பகுதியினர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவரை வீட்டில் வந்து நலம் விசாரித்த அவர் ஆக்சிஜன் கருவி வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அதிரவீன வசதிகள் கொண்ட புதிய ஆக்சிஜன் கருவியை கலையரசிக்கு வாங்கி கொடுத்து நிதியுதவியும் வழங்கி நலம் விசாரித்தார். மீன்பிடித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் தாங்கள் கடும் சிரமத்தில் குடும்பத்தை ஓட்டி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள கலையரசியின் உறவினர்கள், மாதம் 5 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க முடியாமல் திணறியதாகவும் தற்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் உதவி கரம் நீட்டி இருப்பது பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மூச்சு பிரச்சனையால் வாடகை இயந்திரம் பயன்படுத்திய மீனவப் பெண்ணுக்கு சொந்த செலவில் நவீன ஆக்சிஜன் கருவி வாங்கிக் கொடுத்து உதவிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.