தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் இவர் ஆண்டிபட்டி நகரில் மிட்டாய் கடையுடன் குடோன் வைத்துள்ளார்,
ஆண்டிப்பட்டி நகர் முழுவதும் மொத்த விற்பனையில் மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஆண்டிபட்டி நகர் முழுவதும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டிருந்தது.
இதனால் மின்சாரப் பயன்பாட்டிற்காக நாகராஜன் தனது கடையில் உள்ள ஜெனரேட்டரை பயன்படுத்திய போது அதில் இருந்து எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிய தொடங்கியது.
இதனால் குடோனில் இருப்பு வைத்திருக்கும் மிட்டாய்கள் மற்றும் தின்பண்டங்கள் என அனைத்திலும் தீ பற்றி எரிய தொடங்கி கடையின் மேல் பகுதியில் கடும் புகை மூட்டம் வர தொடங்கியது.
இதனை அடுத்து ஆண்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தினால் கடை மற்றும் குடோனில் இருப்பு வைத்திருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தின்பண்டங்கள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டரில் இருந்து பற்றிய தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆண்டிப்பட்டி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.








