வரம் சினிமாஸ், வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்து வெங்கட் ஜானா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இறுதி முயற்சி”
இத் திரைப்படத்தில், ரஞ்சித்,மெளலி மீனாட்சி,விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், மௌனிகா,நீலேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதா நாயகன் ரஞ்சித்,தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் பெரும் கடனாளியாக ஆகிறார்.
கடனை அடைக்க முடியாமல் திணறி வரும் ரஞ்சித்தை கடன் தொகையை வட்டியுடன் செலுத்த சொல்லி கந்துவட்டி கும்பல் மிரட்டி வருகிறது.

அதுமட்டுமின்றி கடனை அடைக்காமல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று கந்துவட்டி கும்பலானது வீட்டு வாசலில் காவல் நிற்பதோடு அவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வருகின்றனர்.
கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் எதுவும் ரஞ்சித்திற்கு கை கொடுக்கவில்லை.
இன்னொரு பக்கம் சென்னை நகரில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவர், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி விடுகிறார்.

இந்த நிலையில், கந்துவட்டி கும்பலின் துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்க, பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக ரஞ்சித் இறுதி முயற்சி எடுக்கிறார்.
அந்த இறுதி முயற்சி என்ன? கந்துவட்டி கும்பலிடம் இருந்து ரஞ்சித்தும் அவரது குடும்பமும் எவ்வாறு தப்பித்தது? அவரது வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் அந்த சைக்கோ கொலையாளி யார்?
என்பது தான் படத்தின் மீதி கதை.
கடன் தொல்லையால் நிம்மதி இழந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கும் தவிப்பும்,கடனை அடைக்க பல்வேறு வழிகளில் போராடுவதும் ஒரு குடும்பஸ்தனாக இருந்து அவர் படும் வேதனையை தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார்,
நாயகன் ரஞ்சித்.

தன் கணவரின் நிலைமையை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறுவதும், தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் ஒரு தாய் தவிக்கும் தவிப்பும் தனது உடல் மொழியாலும் தனது நடிப்பாலும் அசத்தியுள்ளார் மெஹாலி மீனாட்சி.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விட்டல் ராவ், புதுபேட்டை சுரேஷ், கதிரவன் மற்றும் குழந்தை நட்சத்திரம் சிறுமி மெளனிகா, சிறுவன் நீலேஷ் ஆகிய அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதா பாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் கதை களத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளர் சுனில் லாசர்.
மேலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
படப்பிடிப்பு முழுவதும் அதிக காட்சிகள் ஒரே வீடாக இருந்தாலும் மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தி.

கந்துவட்டி கொடுத்து குடும்பத்தை சீர்குலைக்கும் கந்து வட்டி கும்பலுக்கு சவுக்கடியாகவும், அதனால் பாதிப்படையும் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பதை நம் கண் முன் நிறுத்தி கடன் வாங்காமல் இருக்க ஒரு விழிப்புணர்வு படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர்
வெங்கட் ஜனா.
மொத்தத்தில்,
“இறுதி முயற்சி” நிச்சயம் வெற்றி பெறும்.