கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சியானது 15 வார்டுகளை கொண்டது,இதில் ஆறாவது வார்டு பத்மநாபன்புதூர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

அதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து நிதியிலிருந்து பொது கலையரங்கம் கட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறையினர் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது எனக் கூறி அதை இடிப்பதற்காக முடிவு எடுத்துள்ளனர். மேலும் இந்த தொடர்பாக நீதிமன்றமும் இடிக்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த உத்தரவை அமல்படுத்த இன்று அதிகாரிகள் பத்மநாபன்புதூர் பகுதிக்கு ஜெசிபி எந்திரத்துடன் வந்து இடிக்க முற்பட்டனர்.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊர்மக்கள் திரண்டு இடிக்க விட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் அப்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்கமறுத்து ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது நீதிமன்றமே உத்தரவிட்டாலும் மக்களின் விருப்பமில்லாமல் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என வாதிட்டனர்.
ஊர் மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி தொடர்பு கொண்டு நிலைமை எடுத்து கூறினர். பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விஜய்வசந்த் எம்பி, நீர்வள துறை செயல் பொறியாளர் (பொறுப்பு) பிரைட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஜய் வசந்த் எம்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வள துறை அதிகாரிகள், நீர் பாசன துறை தலைவர் ஆகியோருடன் பேசி ஆய்வு செய்து மக்களுக்கு பயன் உள்ள நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.