தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ அக்டோபர் 1 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது, பண்டிகை வெளியீடாக இருந்தாலும், ‘இட்லி கடை’ தனுஷின் சமீபத்திய வெளியீடுகளான ‘குபேரா’ மற்றும் ‘ராயன்’ ஆகியவற்றை விட பலவீனமான தொடக்கத்தையே பெற்றுள்ளது.
‘இட்லி கடை’ முதல் நாளில் மாலை காட்சிகள் வரை சுமார் ரூ. 5 கோடி வசூலித்தது. அதில், தமிழ் பதிப்பு சுமார் ரூ. 3.2 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாளில் ‘இட்லி கடை’ படத்தின் இறுதி பாக்ஸ் ஆபிஸ் வசூல் இந்தியாவில் சுமார் 7 முதல் 8 கோடி வரை இருக்கும் என்றும், உலகளாவிய வசூல் ரூ. 10 கோடியை நெருங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனுஷின் இதற்கு முந்தைய படமான ‘குபேரா’ முதல் நாளில் உலகளவில் ரூ. 14 கோடியை வசூலித்தது. அதை வைத்துப் பார்க்கையில் இட்லி கடை சோஷியல் மீடியாக்களில் நன்றாக பேசப்பட்டாலும் முதல் நாள் ஆவரேஜ் வியாபாரம்தான்.
ஜிவி பிரகாஷுக்கு ஏ,.ஆர்.ரகுமான் கொடுத்த பரிசு
தமிழ் சினிமாவின் அருமையான இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தில் அற்புதமான பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சமீபத்தில் பெற்றார். தனது இரண்டாவது தேசிய விருதைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் . ஒரு வெள்ளை கிராண்ட் பியானோவை பரிசாக வழங்கினார்
அந்த பியானோ படத்தோடு தனது சமூகதளப் பக்கத்தில் எழுதியுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், “”நான் இதுவரை பெற்ற சிறந்த பரிசு. நான் இரண்டாவது முறையாக தேசிய விருதைப் பெற்றதற்காக இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்கு பரிசளித்தார் ரகுமான் சார்… . மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷுக்கு ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு அவர்களின் பிணைப்பை நிரூபிக்கிறது.
தூங்க முடியாமல் தவிக்கும் அஜித்
விஜய் கரூர் கலவரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தற்போது ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் 24 மணி நேர தொடர் கார் பந்தயத்தில் அவர் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் இந்தியா டுடே உடனான பேட்டியில் அஜித், “எனக்கு தூங்குவதில் சிக்கல் உள்ளது. என்னால் ஒரே நேரத்தில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நன்றாக தூங்க முடியாது. விமானங்களில் கூட, முடிந்தவரை ஓய்வெடுக்க முயற்சிக்கிறேன். அதன் மூலம் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதைத் தடுக்க முடிகிறது” என்று கூறியுள்ள அஜித்,
“எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகிறது. இலக்குகளைத் தொடருவதால் சில குடும்ப தருணங்களைத் தவறவிடுகிறேன். எனினும் எனது மனைவி ஷாலினி வாழ்க்கையின் முக்கிய தூணாக இருக்கிறார்” என்றும் நெகிழ்ந்திருக்கிறார் தல.
அஜித் குமார் தூக்கம் வராமல் தவிக்க, அவரது படம் வராததால் அவரது ரசிகர்களும் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.
படையாண்ட மாவீரா
மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் வாழ்க்கைச் சாயலோடு வெளிவந்துள்ளது படையாண்ட மாவீரா திரைப்படம்.
இயக்குனர் வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் இப்படம் வட மாவட்ட அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இயக்குனர் வ.கௌதமன் மாவீரன் குருவாகவே வாழ்ந்திருக்கிறார். ஜெயங்கொண்டம் சிமென்ட் தொழிற்சாலை, நெய்வேலி NLC பிரச்சனைகளை கண்முன் நிறுத்துகிறது படம்.
மண்ணையும் – மக்களையும் நேசித்த ஓர் உன்னத தலைவனின் உண்மை கதை தான் “படையாண்ட மாவீரா!
படத்தில் காட்டப்படும் அக்னி கலசமும் – மாம்பழ சின்னமும் பிரச்சார நெடியாக இருந்தாலும், வட மாவட்ட வாழ்வியலை அழகாக கூறுகிறார் கௌதமன்.
காடுவெட்டி குரு அரியலூர் மாவட்டத்தில் ஏழு அம்பேத்கர் சிலை திறந்ததையும் வெளிக்காட்டுகிறார் இயக்குனர். பகை பாராட்டும் படங்களுக்கு மத்தியில் வட மாவட்ட சாதி முரண்களுக்கு மருந்து போடும் படமாக அமைந்துள்ளது படையாண்ட மாவீரா.
