தஞ்சாவூர், அக்.5 – தஞ்சாவூர் மாவட்டம் அல்லுார் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,47. இவர் மாத்துாரில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 7908-ல் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு விற்பனையை முடித்து, நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கும்பகோணம் சாலை, திட்டை பிரிவில் பைக்கில் வந்த மூவர் மணிகண்டனின் வழியை மறித்து, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது மணிகண்டன், “பணம் இல்லை” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை கீழே தள்ளிய மர்மநபர்கள், மணிகண்டனின் தலையில் அரிவாளால் வெட்டி, அவரிடம் இருந்த சிறிய தொகையை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அவ்வழியாக வந்த சிலர் மணிகண்டனை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டனை தாக்கிய மர்மநபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.