கோவை, தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பேருந்து நிலையம், சின்னதம்மன் தோட்டம், டாடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
இரவு நேரங்களில் வீடுகளின் அருகே உணவுப் பொருட்களை தேடி வருவதோடு, குப்பை தொட்டிகளை சிதறடித்து அச்சுறுத்தும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல அச்சம் அடைந்து வீட்டுக்குள்ளே முடங்கும் சூழல் நிலவுகிறது. அதேபோல அப்பகுதியில் இருக்கும் தோட்டப் பகுதிகளில் சுற்றி திரிவதால் பயிர்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளும் பாதிப்பு அடைந்து உள்ளனர். இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசு அறிவித்தபடி ஊருக்குள் வரும் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.