தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைகுண்டு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் – கோகிலா தம்பதியினர்.
இவர்கள் வருசநாடு அருகே உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 98- லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளனர்.

வாங்கிய கடனுக்காக தனக்கு சொந்தமான தென்னந்தோப்பை சிலம்பரசனுக்கு விவசாயம் செய்வதற்காக செல்வராஜ் குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு சில மாதங்களில் தேங்காயின் விலை அதிகரிப்பால் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சிலம்பரசனை வெளியேற்ற செல்வராஜ் இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிலம்பரசன் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது செல்வராஜ் தர மறுத்ததால் அவர் மீது சிலம்பரசன் கடமலைக்குண்டு காவல் நிலையம், ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு போலீசார் செல்வராஜுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் உப்புதுறை கிராமத்தை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி பிச்சைக்கனி ஆதரவோடு அவரின் தூண்டுதலின் பேரில் போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகக் கூறி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிலம்பரசன் புகார் தெரிவித்தார்.

தோட்டத்தின் உரிமையாளர் செல்வராஜ் தன்னிடம் பணியாற்றும் காவலாளியை ஜாதி ரீதியாக பேசி அடித்ததாகவும், தோட்டத்தில் உள்ள தனது பொருட்களையும் சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தன்னிடம் வாங்கிய பணத்தை செல்வராஜிடம் இருந்து மீட்டு தர கோரியும் தன் மீது பொய் புகார் அளித்த செல்வராஜ்,அதற்கு தூண்டுதலாக இருந்த திமுக நிர்வாகி பிச்சைக்கனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிலம்பரசன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தார்.