வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மனவெளித் தெருவில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட அந்த சமுதாயக் கூடத்தில் மனவெளி தெரு என்பதற்கு பதிலாக பழைய பெயரான வெட்டியாரத் தெரு என எழுதப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். மனவெளி தெரு என்று எழுதப்பட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த செய்தி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜிடமும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பொதுமக்களின் வலியுறுத்தல் படி சாதியை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்ததை தார் பூசி அழித்தார். மேலும் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உடனடியாக மீண்டும் மனவெளித் தெரு சமுதாயக்கூடம் என்ற பெயரிலேயே எழுதப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்தார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாதி பெயரில் எழுதப்பட்டதை தார்பூசி அழித்த சட்டமன்ற உறுப்பினரின் செயலை அப்பகுதியினர் பாராட்டினர்.