தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நெய்வேலி வடபாதி, தென்பாதி மற்றும் சென்னிய விடுதி ஆகிய மூன்று வருவாய் கிராமங்களில் உள்ள 2150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு காவிரி நீர் தரக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் நெய்வேலி வடபாதி, தென்பாதி, சென்னிய விடுதி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் சிறு குறு விவசாயிகள். இவர்கள் அரசிடமிருந்து பணமோ, பதவியோ கேட்கவில்லை. விவசாயம் செய்வதற்கும், ஆடு, மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கும் தண்ணீரைத் தான் கேட்கிறார்கள்.
காவிரித்தாய் கொடுக்கும் தண்ணீரை இங்குள்ள விவசாயிகளுக்கு கொடுக்க அதிகாரிகள் மறுப்பது ஏன். விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இங்குள்ள ஏழை எளிய மக்களின் நலன் கருதி உடனடியாக நெய்வேலி வடபாதி , தென்பாதி, சென்னிய விடுதி பகுதியில் உள்ள 20150 ஏக்கர் விலை நிலங்களுக்கு கல்லணை கால்வாய் புது ஆற்றில் இருந்து மதகு அமைத்து, நீர்வாரி அமைத்தும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே நான் கூறிக் கொள்கிறேன் என்று பேசினார்.

முன்னதாக காவிரி நீர் கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வெற்றி கழகத்தை விமர்சனம் செய்தும் விஜய்யின் செயல்பாடுகளை கண்டித்தும், மீடியாக்கள் அதிகளவில் அவருக்கு வெளிச்சத்தை காட்டுவதாகவும், மீடியாவும், பொதுமக்களும் நடிகருக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.