தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள நரியூத்து கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2000 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது.

5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தார் சாலை புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சேதம் அடைந்த சாலையை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நரித்து கிராமத்திற்கு சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கியது.

ஏற்கனவே இருந்த சாலை முழுவதும் தோண்டப்பட்டு புதிய சாலை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் வருவதாக கூறி வேலையை நிறுத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பாராளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து புகார்கள் கொடுத்தும் சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நரித்து மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.

அதில் வருகிற அக்டோபர் 6ம் தேதிக்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு ரேஷன் கார்டு வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசின் ஆவணங்களை ஒப்படைக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
மேலும் அக்டோபர் 2ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். கிராம மக்களின் இந்த அறிவிப்பு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.