தமிழகத்தின் காவேரி டெல்டாவின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டு இந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் ஏழு மாவட்ட விவசாயிகள் காரைக்காலில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவன வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு அங்கீகரித்து சட்டபூர்வமான ஆணையை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.