நபிகள் நாயகத்தின் 1500 ஆவது பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழ்நாட்டிலே இருக்க கூடிய முக்கியமான இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் எம்பியுமான நவாஸ் கனி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீம் உன் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆற்காடு இளவரசர் நவாப் அப்துல் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, “பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் முதன்முதலாக சந்தித்ததே, திருவாரூரில் நடந்த மிலாது நபி விழாவில்தான்! அதன்பிறகு, அவர்களுக்கிடையில் உருவான அன்புதான், இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்!
இன்றைக்கு இந்த மேடையில் தகைசால் தமிழர் பேராசிரியர் ஐயா காதர் மொகிதீன் அவர்கள் அமர்ந்திருக்கிறார். இதே மேடையில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் அமர்ந்திருக்கிறார். தமிமுன் அன்சாரி அவர்களும் அமர்ந்திருக்கிறார். நெல்லை முபாரக் அவர்கள் என்று பலரும் ஒன்று கூடியிருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை எந்நாளும் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒற்றுமைதான் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கான, முதல் படி!
உங்களின் கோரிக்கைகளை ஆட்சியின்போது ஒவ்வொருமுறையும் பார்த்துப் பார்த்து செய்துகொடுத்தோம்.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு
3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு.
உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. சிறுபான்மையினர் நல வாரியம் தொடக்கம், வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் தொடக்கம், உருது அகாடமி தொடக்கம்,
காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு – என்று இஸ்லாமிய மக்களின் நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த திட்டங்களையெல்லாம் பட்டியலிட தொடங்கினால், பல மணி நேரமாகும்.
இசுலாமிய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் – பெற்றுத்தரும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் உங்கள் கூடவே உங்களில் ஒருவராக இருக்கும்” என்று பேசினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட சென்னை சுற்றுப் புறத்தை சேர்ந்த சில நிர்வாகிகள், “மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து முஸ்லிம் தலைவர்களும் தமிழ் முஸ்லிம் தலைவர்கள்தான். உருதுமுஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை. ஆற்காடு நவாப் உருது முஸ்லிம் என்றாலும், அவர் உருது முஸ்லிம் மக்களிடம் திமுகவுக்காக பேசக் கூடிய இயக்கத் தலைவர்களைப் போன்றவர் அல்லர்.
எனவே இந்த மேடையில் உருது முஸ்லிம் தலைவர்கள் இல்லாதது பெரிய ஏமாற்றம்தான்.
முதல்வருக்கு இதுகுறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அதனால்தான் அரசியல் டுடே மூலமாக தெரிவிக்கிறோம்.
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் உருது முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் 25% உருது முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சென்னை, கடலூர் மாவட்டங்களில் 22% உருது முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் 20% உருது முஸ்லிம்கள் வசிக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18%,செங்கப்பட்டு மாவட்டத்தில் 16% என உருது முஸ்லிம்களின் அடர்த்தி உள்ளது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் 15% உருது பேசும் முஸ்லிம்கள் உள்ளனர்.
ஈரோட்டில் 14%, கோவை,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 13%, மதுரையில் 12% உருது பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
இப்படியாக அடர்த்தியாக இருக்கும் உருது முஸ்லிம்களுக்கு அனைத்து முஸ்லிம் தலைவர்களோடு முதல்வர் அமரும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் அது தடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மேடையில் சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, ஆவடி நாசர் ஆகியோர் அமரவைக்கப்பட்டனர். ஆனால் உருது முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேடையில் அமர வைக்கப்படவில்லை.
இதுவும் உருது முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ளூர கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு அரசியல் டுடே மூலமாக கொண்டுசெல்லுங்கள்” என்கிறார்கள் அந்த நிர்வாகிகள்.
மேலும், திமுகவுக்கு நேற்று வந்த அன்வர் ராஜாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், காலம் காலமாக திமுகவை நேசிக்கும் தங்களுக்கு இல்லையே என திமுகவின் முஸ்லிம் பிரமுகர்களும் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
