ஆறு கட்டளைகள்!
வகுப்பெடுத்த சசிகாந்த் செந்தில்
வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்டறைகள் குஜராத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடத்தப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இன்றைய திருவள்ளூர் மக்களவை உறுப்பினருமான சசிகாந்த் செந்தில்
குஜராத்தில் பயிற்சி முடித்த ’கை’யோடு,
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற
வாக்குச் சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுக்க
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வந்தார்.
சுதந்திரம் பெற்ற நாள் முதல், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை, விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றிருக்கின்றன.
இன்னும் 7 மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழகத்திலே உறுதியாக காங்கிரஸ் அஸ்திவாரம் கொண்ட குமரி மாவட்டத்தில், அதுவும் 4 முறை காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமாரின் தொகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பட்டறையில் பங்கேற்றார்
சசிகாந்த் செந்தில்.
அரங்கம் நிறைந்த நிலையில், எலக்ட்ரானிக் திரையை காட்டி வகுப்பைத் தொடங்கினார் .
”குஜராத் பயிற்சி பட்டறையில் நான் கற்றுக் கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் முதலில் மகிழ்ச்சி.
வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிடும் தொகுதிகளோ, நம் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தொகுதிகளோ நம் முன் 6 கட்டளைகள் உள்ளன. இந்த 6 கட்டளைகளையும் அடிபிறழாமல் நாம் பின்பற்ற வேண்டும்.
1) நாம் எந்த வாக்குச்சாவடி முகவராக இருக்கிறோமோ, அந்த பகுதியில் வாக்காளர்கள் யார் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். இந்த வாக்காளர்களில் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள் எவர், எவர் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும்.
2) எதிர் கட்சிக்கு வாக்களிக்கும் மன நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? இதே பகுதியில் எத்தனை பேர் பிற கட்சியின் உறுப்பினர்கள் யார் யார் என்பதை அடையாளம் காண வேண்டும்.
3) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதியிலும். எந்த கட்சியையும் சாராதவர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு தேர்தல் இவர்கள் வேறு,வேறு கட்சிக்கு வாக்களிப்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு அவர்களை, வரும் தேர்தலில் காங்கிரஸ்,அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும்.
4) இராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்னுடைய ஒரு ஒட்டில் தான் இந்த தொகுதி வேட்பாளர் வெற்றி பெற போகிறார்? என கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை சந்தித்து வாக்குரிமை எத்தகைய வலிமை உடையது என்பதை புரிய வைத்து, நமக்கு அல்லது நம் கூட்டணிக்கு வாக்களிக்க வைக்க வேண்டும்.
5.)வெளியூரில் இருக்கும் நம் பகுதி வாக்காளரை தொடர்ந்து, தொடர்புகொண்டு வாக்குப்பதிவு நாளில் ஊருக்கு வந்து வாக்களிக்க செய்ய முயல வேண்டும்.
5) தேர்தல் அன்று நம் வேலை அதிகம். காலை வாக்களிக்க போனால் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும், சாப்பாட்டிற்கு மேல் போய்க் கொள்ளலாம் என்று பலர் வீட்டிலேயே இருப்பார்கள். நாம் அதுவரை சந்தித்த நமது ஆதரவாளர்கள், நமது கூட்டணி ஆதரவாளர்கள், யாருக்கு ஓட்டு போட்டால் என்ன என்ற மனநிலையில் இருப்பவர்கள் அனைவரையும்
வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன் வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பாக ஒவ்வொரு வாக்கு சாவடி பகுதியில் இருக்கும் பெண்கள். வாக்குப்பதிவு நாளில் வீட்டு சமையல் வேலையை முடித்து விட்டு வாக்களிக்க செல்லலாம் என இருப்பார்கள். அப்படிப்பட்ட நம் அன்னையர் குலத்தை வாக்குப்பதிவு நாளில் ஒன்றுக்கு, இரண்டு முறை சந்தித்து வாக்குச் சாவடிக்கு அழைத்து வர வேண்டும்.
இந்த ஆறு கட்டளைகளை பல்வேறு உதாரணங்களை சொல்லி. ஒரு பேராசிரியர் அவரது மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போல் எடுத்தார் சசிகாந்த் செந்தில்.
வாக்குச் சாவடி முகவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்லிய சசிகாந்த் செந்தில், “அண்மையில் நமது தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டை தேர்தல் ஆணையம் எப்படி நடத்தியது என்பதை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்து மக்கள் மத்தியிலும் சொல்லியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்ட தொகுதியில் சில சுற்றுகள் பின் தங்கியதை, நாம் செய்திகளில் பார்த்தோம். வரும் தேர்தல்களில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
நாம் சிறுவர்களாக பள்ளியில் படித்தபோது பார்த்த பாரதமாதாவை பாஜக முழுதாக மாற்றிக் கொண்டிருக்கிறது. நாம் பாரதமாதாவை காப்பாற்றவேண்டும். அதற்கு நம் வாக்கை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று நிறைவு செய்தார் சசிகாந்த் செந்தில்
