அம்மா உணவகம்!
கே.டி.ஆர். அரசியல் அதிரடி தொடர்!-19
அம்மாவின் அரும்பெரும் சமூக நீதிச் சாதனைகளில் மிகச் சிறப்பானதும் மக்களோடு மிக நெருக்கமானதுமான திட்டம் என்றால், அது அம்மா உணவகம் திட்டம்.
தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று இந்த உலகத்தின் மீது கோபப்பட்டார் முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார்.
ஆனால் நமது புரட்சித் தலைவி அம்மாவோ, இந்த நாட்டில் ஒரு தனி மனிதன் கூட உணவில்லாமல் பசியால் வாடக் கூடாது என்று தாய்மை உணர்வோடு தொடங்கிய திட்டம்தான் அம்மா உணவகம்.
2013 பிப்ரவரி மாதம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அப்போதைய தமிழக முதல்வருமான புரட்சித் தலைவி அம்மா அவர்களால் சென்னையில் அம்மா உணவகம் முதன் முதலாக தொடங்கி வைக்கப்பட்டது.
அம்மா அவர்கள் அன்னமிடும் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக வருகை தருகிறார்கள். வரிசையாக அகன்ற பாத்திரங்களில் தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், இனிப்பு, எலுமிச்சை சாதம் ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றன.
அம்மா அந்த கூடத்துக்குள் வந்ததுமே சமையல் கலைஞர்களான பெண்கள் வரவேற்கிறார்கள். அம்மா அவர்களும் அவர்களை வணங்கி, ‘நீங்கதான் சமைக்கிறிங்களா?’ என்று பரிவோடு கேட்கிறார்.
அம்மாவின் அருகே அப்போதைய சென்னை மாநகர மேயர் அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் உடன் நின்று கொண்டிருக்கிறார்.
அம்மா கரண்டியை கேட்கிறார். அவரிடம் கரண்டி வழங்கப்பட்டதும், ஐந்து வகை சாதங்களில் இனிப்பைத் தேடுகிறார். இனிப்பை எடுத்து, முதல் பயனாளியாக வந்த பெண்மணிக்கு பரிமாறி, ‘முதல்ல ஸ்வீட் சாப்பிடுங்க’ என்கிறார்.
அதன் பின் ஒவ்வொரு சாதமாய் பரிவோடு பரிமாறுகிறார் புரட்சித் தலைவி அம்மா.
சிலருக்கு பரிமாறி, இந்த வரலாற்று சிறப்பு மிக்க அம்மா உணவகம் திட்டத்தைத் தொடங்கி வைத்த புரட்சித் தலைவி அம்மா… அடுத்து ஒரு பிளேட்டை எடுத்து அத்தனை வகை சாதங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து தனக்கு பரிமாறிக் கொள்கிறார்.
இனிப்பில் தொடங்கி ஒவ்வொரு சாதமாக எடுத்து அவர்களோடு சேர்ந்து சுவைத்து சாப்பிடுகிறார்.
அருகே நின்ற சமையல் பெண்களிடம், ‘நல்லா இருக்கும்மா…’ என்று பாராட்ட, அவர்கள் கையெடுத்து அம்மாவை கும்பிட்டு மனம் மகிழ்கிறார்கள்.
ஏழை மக்கள் சாப்பிடும் உணவு விலை குறைவானதாக மட்டும் இருந்தால் போதாது… தரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக அந்த விழாவிலேயே, அந்த உணவை தானும் அதை சாப்பிட்டு, தமிழ்நாட்டு ஏழை மக்களில் நானும் ஒருத்தி என்று அந்த விழாவிலே பறைசாற்றினார் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா.
இப்படி ஒரு அன்னபூரணியாக தமிழ் நாட்டு மக்கள் மனதில் நேற்றல்ல… இன்றல்ல… நாளையல்ல… என்றும் நிரந்தரமாய் நிலைத்திருக்கிறார் அம்மா உணவகம் மூலமாக சாதனை படைத்திட்ட புரட்சித் தலைவி.
சென்னையில் மட்டுமே வார்டுக்கு ஒன்று என அடிப்படையில் 200 வார்டுகளிலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவு செய்யப்பட்டன.
ஒரு இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய் இப்படி மக்களுக்கான தரமான உணவை மலிவு விலையில் கொடுக்கும்போது அடித்தட்டு மக்கள் ஏராளமானோர் அதில் உண்டு பயனடைந்தனர்.
அம்மா உணவகங்கள் காலை 7 மணிக்குத் திறக்கும். காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரைக்கும் அம்மா உணவகம் திறந்து ஏழைகளின் பசியை போக்கும் அன்ன ஆலயங்களாக விளங்குகின்றன.
இட்லியைப் போலவே அடுத்தடுத்த மாதங்களில் சப்பாத்தியும் அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தது.
மாநகரங்களில் உள்ள ஆட்டோ ஒட்டுநர்கள் தூய்மைப் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்து வீட்டுக்கு மாதாமாதம் பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெளியூர் உழைப்பாளிகள் இப்படி பொருளாதார அடிப்படையில் விளிம்பு நிலையில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றாடப் பசி தீர்க்கும் அட்சய பாத்திரம்தான் அம்மா உணவகம்.
சாப்பிடும் தட்டுகள் சுத்தமாக இருக்க வெந்நீரால் கழுவப்படுகின்றன. கேன்டீன்களின் தரைகள் மற்றும் சுவர்கள் பளபளப்பான டைல்ஸ் போடப்பட்டு தூய்மையாக இருந்தன. ஒவ்வொரு அம்மா உணவகத்தையும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை திடீர் திடீரென ஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார் புரட்சித் தலைவி அம்மா.
”ரெண்டு சாம்பார் சாதம்… ஒரு தயிர் சாதமும் போதும். என் வயிறு நிரம்பிடுச்சு… இவ்வளவு மலிவா கொடுக்குறாங்களேனு யாரும் சந்தேகப்படவும் முடியாது. சாப்பாடு கலப்படம் எதுவும் இல்லாம சுவையா இருக்கு. மதிய சாப்பாடு எனக்கு 13 ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது. இந்த விலைக்கு ஹோட்டலுக்கெல்லாம் போய் சாப்பிடும் வசதி எனக்கு இல்ல. குறைந்த விலையில் வயிறு நிறைய சாப்பாடு போடும் அம்மா அம்மா என்னிக்கும் நல்லா இருப்பாங்க” என்று தன் வயிற்றைத் தொட்டு வாழ்த்துகிறார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்.
இவரைப் போல மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்க்ள் என லட்சக்கணக்கான வயிறுகள் இன்னும் அம்மாவை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றன.
அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட மற்ற திட்டங்களைப் போலவே அம்மா உணவகம் திட்டமும் இந்தியாவின் பிற மாநிலங்களால் பாராட்டப்பட்டன.
கர்நாடகா மாநிலத்தில் இந்திரா கேண்டீன் என்ற பெயரிலும், ஆந்திராவில் அண்ணா கேண்டீன் என்றா பெயரிலும், மத்திய பிரதேச மாநிலத்தில் தீன தயாள் கேண்டீன் என்ற பெயரிலும் பல்வேறு பெயர்களில் தமிழ்நாட்டின் அம்மா உணவகம் திட்டத்தை பின்பற்றப்பட்டு, க அங்கேயும் குறைந்த விலையில் ஏழை மக்களுக்காக உணவகங்களைத் திறந்தார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள்.
இந்திய நாட்டின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல… உலகின் பிற நாடுகளிலும் அம்மா உணவகம் திட்டம் பாராட்டப்பட்டது. உலக அளவில் வெளியாகும் பத்திரிகைகள் எல்லாம் அம்மா உணவகம் திட்டத்தை பாராட்டின.
அம்மா உணவகங்களில் சாப்பிடக் கூடியவர்களுக்கு ஏற்றத் தாழ்வு சிந்தனை மறந்து, சமூகக் கண்ணோட்டத்தோடு அம்மாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவக திட்டத்தால் சமூக ஒற்றுமை சிந்தனையும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தொண்டு ஆர்வமும் ஏற்பட்டது.
சாதி மதம் பார்க்காமல் குறைந்த விலையில் உணவு கொடுத்த ஏழைகளின் பசியாற்றுகிற இத்திட்டமானது சமூகப் புரட்சிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஏனென்றால் பசித்திருக்கும் மனிதனுக்கு உணவளிப்பதுதான் முதன்மையான சமூக நீதி. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் வறுமையை முற்றிலுமாக ஒழித்தது அம்மா உணவகம் திட்டம் என சான்றோரால் பாராட்டப்பட்டது.
தினசரி கூலி வேலை செய்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டமாகவும், சமூகத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள அனைவருக்கும் பயன் மிக்க திட்டமாக விளங்கியது.
இப்படி அம்மாவின் கருணை உள்ளத்தின் சிகரமாக ஜொலிக்கும் அம்மா உணவகத் திட்டம்… அம்மாவின் மறைவுக்குப் பின் அண்னன் புரட்சித் தமிழர் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது,
குறிப்பாக கோவிட் தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டபோது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
ஊரடங்கு உத்தரவால் பல தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்களின் நிலையும் இதே நிலைதான். சுருக்கமாகச் சொன்னால், ஏழை மக்களிடம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட பணம் இல்லை.
அப்போது அம்மா உணவகம்தான் தொடர்பாக… ஏழை மக்களின் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்கின்ற அளவுக்கு முதலமைச்சராக இருந்த அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் மேற்கொண்ட முடிவு இப்போது நினைத்தாலும் கண்களில் கண்ணீரைத் துளிர்க்க வைக்கும்… உள்ளத்தை சிலிர்க்க வைக்கும்!
என்ன முடிவு அது…
அடுத்த வாரம் பார்க்கலாம்…
