இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் குமரகுரு நிறுவனங்கள் சார்பில் “2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது யார்?” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவர் ஏஆர் உன்னிகிருஷ்ணன் சிறப்பு உரை நிகழ்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர் இந்தியா 2047க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், உற்பத்தித் துறை குறைந்தது 25% பங்கைக் கொள்ள வேண்டும் (தற்போது 12.5% மட்டுமே) என அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு, இந்தியாவின் பொருளாதாரத்தில் 30% பங்களித்து வருவதையும், வாகன உற்பத்தி, கட்டுமானப் பொருட்கள், ரசாயனங்கள், சிமெண்ட், மின்னணுவியல், விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சூழலை பெற்றிருப்பதையும் அவர் பாராட்டினார்.
மேலும், மின்னணுவியல் உற்பத்தி எதிர்காலத்தில் முக்கிய பங்காக இருக்கும் என்றும், மின்னணுவியல் வடிவமைப்பு உற்பத்தியை விட பெரிய துறையாக மாறும் என்றும் கூறினார். இத்துறையில் தமிழ்நாடு அதிக முதலீட்டை ஈர்த்துவருவதை அவர் குறிப்பிட்டார்.
தகுதிகளை விட அறிவு மற்றும் திறமை முக்கியம் என்பதை வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் IQ-வுக்குப் பதிலாக EQ (Emotional Quotient) அதிக முக்கியத்துவம் பெறும் எனக் கூறினார்.