சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா சிறப்பு சோதனையில் ரயில்வே பெட்டிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடிய ஏழு பேர் கொண்ட கும்பலை தென்னக ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை ரெயில்வே யார்டில் உள்ள இன்டீரியர் ஓவர்ஹாலிங் ஷெட் அருகே, இரு வாகனங்களில் ரெயில்வே கோச் உபகரணங்களை சட்ட விரோதமாக ஏற்றிக் கொண்டு இருந்த ஆறு பேரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனையில் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கோவன், ராதாகிருஷ்ணன், கோகுல்பிரசாத், அருண்பாண்டி, ஜார்ஜ் புஷ், வெற்றிவேல் என்பது தெரிய வந்தது. மேலும் இரும்புப் பொருள்களை கடத்தி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இடம் இருந்து 745 கிலோ எடையிலான ரெயில்வே உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை மாவட்டம், சூலூரில் உள்ள முருகன் மெட்டல்ஸ் என்ற ஸ்கிராப் கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அங்கு சென்ற ரயில்வே காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது மேலும் 405 கிலோ ரெயில்வே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் கடையின் உரிமையாளர் பாலமுருகனும் கைது செய்தனர். மொத்தம் ரூ.42,000 மதிப்பிலான ரெயில்வே சொத்துகள் மீட்கப்பட்டதாகவும், கோவை ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகிய ஏழு பேரையும் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.