மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்த ஒரே மாதத்தில் பழுதாகி நின்றதால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென டிரான்ஸ்பார்மர் பழுதாகி சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டது. இந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் திடீரென டமார் என சத்தம் கேட்டது பார்த்தால் மின்சார ட்ரான்ஸ்பார்மர் வெடிக்கும் சத்தம் என்று அருகில் இருந்தவர்கள் கூறினார்கள். இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட போது அடுத்தடுத்து சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் மற்றும் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் என மூன்று டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி சோழவந்தானின் நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்த மின்சார ட்ரான்ஸ்பார்மர் ஒரே மாதத்தில் பழுதாகி விட்டதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் வீடுகளில் இருந்து வெளியே தெருக்களில் படுத்து உறங்கிய அவலம் ஏற்பட்டது. குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் மேலும் சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். போதிய பணியாளர்கள் இல்லாததால் விரைவில் மின்தடையை சரி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாகவும் பராமரிப்பு பணிகளை செய்ய உபகரணங்கள் வாங்குவதில் அரசு மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனிவரும் காலங்களிலாவது மின்தடை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.