கோவை, தொண்டாமுத்தூர் அண்ணாநகர் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் 7 முறை மட்டுமே அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கெம்பனூர் பகுதிக்கு 17 முறை இயக்கப்படும் அரசு பேருந்தை அண்ணாநகர் வரை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் பேருந்துகளை இயக்க கோரி மனு அளித்தனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறும் போது, இரண்டாவது முறையாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்து உள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 3 ஆம் தேதி கெம்பனூர் வரை இயக்கப்படும் பேருந்தை தீண்டாமை பார்க்காமல் அண்ணாநகர் வரை இயக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இது குறித்து உடனடியாக பேருந்தை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால் அதனை அமல்படுத்தவில்லை. தினமும் கெம்பனுருக்கு 17 முறை பேருந்து செல்கிறது. அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணாநகருக்கு அனைத்து பேருந்தும் இயக்கப்படுவது இல்லை.

வன விலங்குகள் நடமாடும் பகுதி ஆபத்தான முறையிலேயே பணிக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியர்கள் செல்கின்றனர்.
இது குறித்து அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டால் ஊர் பிரச்சனை என கூறுகிறார்கள்.
சமூக நீதி பேசும் தமிழகத்தில் தீண்டாமை பிரச்சனை நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.