அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி தெற்கு புதுக்குடி பகுதியில் அமைத்துள்ள உரகிடங்கினை ஆய்வு செய்து , உடனே அதனை போர்க்கால அடிப்படையில் அகற்றிட வலியுறுத்தி,தெற்கு புதுக்குடி கிராம பொதுமக்கள் , நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி தலைமையில், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (பொது ) பரிமளத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர்.

அம்மனுவில், கிராமப்பொது மக்கள் கூறியிருப்பதாவது, தெற்கு புது குடி கிராமத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சி அமைத்துள்ள உரக் கிடங்கினால்,அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களாகிய நாங்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகியுள்ளோம் .அப்பகுதியில் 500 மீ வரை நிலத்தடி நீர்,கிணற்று நீர் உள்ளிட்டவை , இந்த உரக்கிடங்கினால் பாதிப்படைந்து, குடிநீர் மிகவும் மாசடைந்து, குடிக்கும் நிலையிலிருந்து தரமற்றதாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள கல்வெட்டு ஏரியில் ,குப்பை கழிவுகள் கலந்து நீர் மாசடைந்து உள்ளதால், ஏரி நீரை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் .

அப்பகுதியில் இயங்கி வரும் உரகிடங்கினால் ,ஈ மற்றும் கொசு அதிக அளவில் உற்பத்தியாகி,அவற்றால் 3000 குடும்பங்கள் பெருந் துன்பம் அடைந்து வருகிறோம் .மேலும் இவ் உரகிடங்கினால் எங்கள் பகுதிகளில் ஒரே துர்வாடை வீசுகிறது. பொதுமக்களுக்கு ஆஸ்மா,மர்ம காய்ச்சல் , நுரையீரல் தொற்று நோய்கள் அடிக்கடி இக்கிடங்கினால் ஏற்படுகிறது.எனவே உர கிடங்கினை ஆய்வு செய்து, வேறு இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்காவிட்டால், எங்களது ஆதார் அட்டை ,குடும்ப அட்டை,ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.