• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக புகார் மனு..,

ByAnandakumar

Sep 23, 2025

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளத்தின் சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அந்த அமைப்பின் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில்,

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் செயல்படாமல் உள்ளதால் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு மணலால் மட்டுமே வீடுகள், கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்று காத்திருக்கும் பொதுமக்கள் எந்த விலை கொடுத்தும் ஆற்றுமணல் வாங்க தயாராக இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சோமூர் ஊராட்சிக்குட்பட்ட அச்சமாபுரம் கிராம நிர்வாகத்திற்குட்பட்ட திருமுக்கூடலூரில் தினசரி இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக காவிரி ஆற்றிலிருந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நூற்றுக்கணக்காள கனரக லாரிகளில் திருட்டு மணல் எடுத்து அனுப்பி வருகிறார்கள்.

ஒரு லாரியில் 7 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.7500/- பெற்றுக்கொண்டு லோடு ஏற்றி விடுகிறார்கள். ஆற்றுக்குச் சென்று யாரும் வீடியோ, போட்டோ எடுக்க அனுமதிக்காமல் அடியாட்களை வைத்து அடித்து மிரட்டி அனுப்பி விடுகிறார்கள். மணல் கொள்ளை நடைபெறும் திருமுக்கூடலூர் வாங்கல் காவல்நிலையத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், காவல்துறையினர் அருகாமையில் இருந்தும் இந்த மணல் கொள்ளை தடுக்காமல் மணல் கொள்ளையினரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். மேற்படி ஊரில் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடுவதால் அரசுக்கு தினசரி சுமார் ரூ.50 இலட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றவர்கள்தான் மேற்படி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மணல் கொள்ளை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர், காவல்துறையினருக்கு நேரில் சென்று பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல்துறை திருச்சி மத்திய மண்டல துணைத்தலைவர் உத்தரவின்பேரில், மேற்படி இடத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட லாரிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு சில நாட்களுக்கு மணல் கொள்ளையில் ஈடுபடாமல் இருந்தார்கள். தற்போது மீண்டும் தொடர்ந்து தினசரி நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் மணல் எடுத்து விற்பனை செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதுசம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டி மனு கொடுக்க சென்றபோது எனக்கு இதுமட்டும் வேலையல்ல, பல இதர வேலைகள் உள்ளது என்று உதவியாளரிடம் மனுவை கொடுத்து விட்டு செல்லுமாறு அக்கறையின்றி பதில் சொல்கிறார். உயர்நீதிமன்றம் மணல் கடத்திலில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உறுதுணையாக இருக்கின்ற அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளார்கள் என்பதை தமிழக முதல்வரின் கனிவான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட இடத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்தும், மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வரும் கரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையினர், காவல்துறையினர், பொதுப்பணித்துறையிளர், கனிமவளத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து இதுபோல் மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தவிர்த்திட விரைந்து தமிழகம் முழுவதும் அரசு மணல்குவாரிகளை இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த செல்ல ராஜாமணி, வருகின்ற 30 ஆம் தேதி கரூரில் மணல் கொள்ளை நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று, அங்குள்ள வாகனங்களை சிறை பிடித்து ஊடகத்துறையினர் முன்னிலையில் காவல்துறையிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்று புகார் அளித்த நிலையில், மணல் கொள்ளை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களிடம் தெரிவித்துள்ளார். தவறும் பட்சத்தில் வருகின்ற 30ஆம் தேதி நிச்சயமாக போராட்டம் நடைபெறும் என்றார்.