கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ‘யங் இண்டியன்’ அமைப்பு சார்பில், ஒன்பதாவது பதிப்பாக ‘எக்ஸ்பேக்டர்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போர்விமான படை வீரர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளி வீரர் பிரசாந்த் பேசியதாவது:

விண்வெளி துறையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. ககன்யான் திட்டத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை தீவிரமாக மேற் கொண்டு வருகிறது. இதற்கென விண்வெளி வீரர்கள் தயாராகி வருகின்றனர். கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வான்வெளியில் வீரர்களின் வாழ்வியல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதற்கான தகவமைப்புகளுக்கு தயாராகி வருகிறோம்.
அன்றைய ஆன்மிகத்துக்கும், இன்றைய அறிவியலுக்கும் தொடர்புகள் ஏராளம். நமக்குள் இருக்கும் பல விஷயங்கள், பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளன. பல்வேறு கால கட்டங்களில் இறை நம்பிக்கைகள் நிரூபணமாகியுள்ளன. அவைகளை வானில் பறக்கும்போது உணரவும் முடிந்தது. எத்தகைய தொழில்நுட்பங்கள், நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வந்தாலும், நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், , இயற்கையான இறை நம்பிக்கையை வெல்ல முடியாது, இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், டைட்டான் குழும முன்னாள் தலைவர் பாஸ்கர் பட், பிரைட் திட்டத்தின் இணை நிறுவனர் விஜய்குமார், ஆட்டோ கார் இன்டியா ஆசிரியர் ஹர்மச் சொரப்ஜி, ஏஐ புரோடகி ராவ் ஜான் அஜூ, தலைமை பண்பு பயிற்சியாளர் அனந்த நாராயணன் உள்ளிட்டோர் பேசினார். யங் இண்டியன் கோவை கிளை தலைவர் நீல் கிகானி வரவேற்றார். கல்வி பிரிவு தலைவர் வைஷ்ணவி நன்றி தெரிவித்தார்.