• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குமரிக்கும் பஞ்சாப்புக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

அமிர்தசரஸில் செல்லுக்கும் அய்யா வழி பால பிரஜாபதி

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் ’அய்யா வழி’  வைகுண்டர் வழிபாட்டுக்கும்,  பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் சீக்கியர்களின் வழிபாட்டுக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கூறி வியந்திருக்கிறார் சீக்கிய மத குரு.  

சீக்கிய மத குருவான ஜெதிதர் அகில் ஷாகிப்  குமரி மாவட்டத்தில் இருக்கும்  சாமிதோப்புக்கு செப்டம்பர் 10 பிற்பகல் 2 மணிக்கு  வருகை தந்தார். சாமித் தோப்பு பால பிரஜாபதி அடிகளாரை  சந்தித்து பேசியவர் அதன் பின் அய்யா வழிக்கும், சீக்கியர்களுக்குமான ஒற்றுமைகளை பட்டியல் போட்டபோது நமக்கு ஆச்சரியம் மேலிட்டது.

“தென் தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலத்தில். மக்கள் மீது மன்னரது அடக்குமுறைக்கு எதிராக முத்துக்குட்டி என்ற வைகுண்டர் தோற்றுவித்த, புதிய வழிபாட்டு முறை என்பதை இங்கு வந்து குரு பால பிரஜாபதி அடிகளார்  சந்திப்பின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

சீக்கிய மத 7 வது குரு ஏதோ ஒரு காலத்தில் தமிழகம்  பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார்.  அந்த சீக்கிய குரு சாமிதோப்பு வந்ததை எங்கள் குருக்கள் பின் வந்த குருக்களுக்கு ஒரு தகவலாக சொல்லியது என் நினைவில் இருக்கிறது.

இலங்கை மற்றும் தூத்துக்குடி பகுதியில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இன்று சாமிதோப்பு வந்து பூஜித குரு பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியது.புனித முந்திரி கிணற்றை பார்த்தேன்.

சீக்கிய மத வழிபாட்டின் பல்வேறு கூறுகள், அய்யா வழியிலும் இருப்பதை மானசீகமாக என்னால் உணர முடிந்தது.

நாங்கள் தலையில் அணியும் ‘டர்பன்’ எவ்வளவு புனிதமானதோ,அதே புனிதத்தை அய்யா வழியிலும் தலைப்பாகை அணிவதில் உள்ள ஒர் கலாச்சார ஒற்றுமையை காண்கிறோம்.

அய்யா வழி பூஜித குருக்கள் அந்த காலத்தில் ஒரு வாளுடன் இருக்கும் புகைப்படங்கள் பலவற்றை இன்று நான் காணும் வாய்ப்பை பெற்றேன். அந்த முன்னோர்கள் பின் பற்றிய வாளுடன் வாழும் வாய்ப்பை பூஜித குரு பால பிரஜாபதி அவர்கள் மூலம் மீண்டும் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறோம்.
 குரு பால பிரஜாபதியை  பஞ்சாப் மாநிலம்  அமிர்தசரஸ்க்கு சிறப்பு விருந்தினராக அழைக்க உள்ளோம்.  அப்போது  சீக்கிய குருக்களின் பாரம்பரிய உடை வாளை உடன் அணிந்துகொள்ள  கேட்டுக் கொண்டுள்ளோம்.

தமிழக அரசின்  பொதுதேர்வாணையம் அண்மையில் நடத்திய பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வியில்  முடிசூடும் பெருமாள் என்பதை கீரிடம் சூடிய என தமிழ் மொழிப்படுத்தியிருக்கலாம்,அதை விடுத்து முடி வெட்டும் என்ற வார்த்தை அநாகரிகமாக உள்ளது.

 தமிழக அரசு இத்தகைய அநாகரீக மான வார்த்தையை பயன் படுத்திய தேர்வு துறை உறுப்பினர் மீது உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை”  என ஜெதிதர் அகில் ஷாகிப் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து அய்யாவழி பால பிரஜாபதி  அடிகளாரிடம் பேசினோம்.

”சீக்கிய மத குரு இலங்கைக்கு சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். அங்கே அய்யாவழி பற்றிய தகவல் அறிந்துகொண்டு இங்கே வந்தார்.  பிற்பகல் 2 மணிக்கு இங்கே வந்தார். அவரை  வரவேற்றோம்.

எங்களது வழிபாட்டு முறையும் அவர்களது வழிபாட்டு முறையும் ஒன்றாகவே இருக்கிறது என்று அவர் சொன்னார். பாரம்பரியமாகவே எங்களுக்குத் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது.

வடக்கில் தோன்றிய பழமையான் ஐதீகமும், தெற்கில் தோன்றிய பழமையான ஐதீகமும் ஒன்றாக இருக்கிறது. இறைவன் முன் அனைவரும் சமம் என்று எங்களது அகிலத் திரட்டு சொல்லியிருக்கிறது. அதையேதான் சீக்கிய மதமும் சொல்கிறது. எங்கள் கருவறையில் கண்ணாடி வைத்திருக்கிறோம். உனக்குள் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காக. இதைத்தான் சீக்கியமும் சொல்கிறது.

கோயில் கட்டிட அமைப்பு, தலைப்பாகை, வாள் என பல அடையாளங்களும், தத்துவமும் எங்களிருவருக்கும் இடையேயான ஒற்றுமையை காண்பிக்கிறது.

எங்களது முன்னோர்கள் சிலர் வாள் வைத்திருந்ததைப் பார்த்த அவர், அதுபற்றி கேட்டார். விளக்கம் கொடுத்தோம்.  சீக்கிய மதத்திலும் குருக்கள் வாள் வைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.

என்னை அமிரதரஸ் பொற்கோவிலுக்கு அழைத்துள்ளார்கள். அனேகமாக வரும் நவம்பர் மாதம் நான் பஞ்சாப் செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன” என்று கூறினார்.

உலகில் எந்த மூலையில் தோன்றினாலும் மார்க்கங்கள் மனிதர்களை மேம்படுத்தவே!