தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து போலியான இரிடியம் ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பல், ‘இரிடியம் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் இருப்பதாகவும், அந்தப் பணத்தை வெளியே எடுக்க முதலீடு தேவை’ என்றும் கூறி பலரை ஏமாற்றியுள்ளது.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.1 கோடி தருவோம் என ஆசை வார்த்தை கூறி, பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் சிக்கியுள்ளனர். இந்த மோசடி குறித்த புகார்கள் தொடர்ந்து குவிந்து வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அந்த வகையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மூர்த்தியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ஜெயராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் நெல்லை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை
