தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2025 தரவரிசையில், கல்லூரிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் பி.எஸ்.ஜி 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணைய்யன், முதல்வர் ( பொறுப்பு) செங்குட்டுவன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

இந்த வெற்றி, ஒட்டுமொத்த பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடும்பத்தின் அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த ஒரு சான்றாகும்.
எதிர்பார்ப்புகளை விஞ்சிய சாதனைகள் தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடும் என்ஐஆர்எப் கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டமளிப்பு முடிவுகள், சமூக இணைப்பு மற்றும் உள்ளடக்கம், மற்றும் கண்ணோட்டம் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் தரவரிசைகளை வெளியிடுகிறது.
இந்த அனைத்து அம்சங்களிலும் கல்லூரி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
குறிப்பாக, ஆசிரியர்களின் தகுதிகள், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு முடிவுகள் ஆகியவற்றில் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளோம். சிறந்த எதிர்காலத்திற்கு பாதை வலுவான வேலைவாய்ப்பு பிரிவு, மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது.இந்த சாதனை ஒரு முடிவல்ல.
இது ஒரு புதிய தொடக்கத்திற்கான ஒரு படிக்கல். எதிர்காலத்தில், இந்தியாவின் சிறந்த ஐந்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெறுவதே இலக்கு. இதை அடைய, உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், பன்முகத் துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், டிஜிட்டல் கற்றலை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற பல திட்டங்களை வைத்துள்ளோம் என்றனர். பேட்டியின் போது கல்லூரி நூலகர் சிவகுமார் உடனிருந்தனர்.